ரூ.1,000 கோடி நஷ்டம், தடுப்பு மருந்துகள் சேதம்: சீரம் அறிவிப்பு!
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா நிருபர்களிடம் பேசினார்.
புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் டெர்மினல் 1 நுழைவு வாயில் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.
இந்நிலையில், சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தது. இதனிடையே, சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா நிருபர்களிடம் இது குறித்து பின்வருமாறு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, தீ விபத்து காரணமாக கொரோனா தடுப்பு மருந்துக்கு பாதிப்பு இல்லை. சம்பவம் நடந்த கட்டிடத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி 1 கி.மீ. தொலைவில் நடந்து வருகிறது.
ஆனால் விபத்து நடந்த கட்டிடத்தில் காசநோய் தடுப்பு மருந்து மற்றும் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பு பணி நடந்து வந்தது. அந்த தடுப்பு மருந்துகள் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்து காரணமாக எங்களுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.