வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (18:15 IST)

'கருக்கலைப்பு' செய்யலாம் - பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றம் அதிரடி

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் ஒருவர் தொடுத்த வழக்கில், கருவில் உள்ள சிசு குறைபாடுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து உள்ளனர்.
 

 
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவருடன் பழகிவந்தவர் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற அப்பெண், 24 வாரங்களுக்குப் பிறகு கருவைக் கலைக்க முயன்றபோது கருக்கலைப்பு தொடர்பான சட்டம் தடையாக இருந்தது.
 
இருபது வாரத்திற்கு மேலான கருவைக் கலைக்கக் கூடாது என்று 1971-ஆம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்குப் பிறக்கும் குழந்தை மூளை, உடல் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறி, கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டனர்’ என்று தெரிவித்திருந்தார்.
 
இது தொடர்பாக மத்திய அரசுக்கும், மஹாராஷ்டிர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அப்பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மருத்துவ ஆய்வு நடத்த மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இது குறித்து மருத்துவ அறிக்கை கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில், கருவின் வளர்ச்சி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேராமல், கருவைக் கலைக்கலாம் என்று மும்பை மருத்துவமனை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
 
இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கருவில் உள்ள சிசு குறைபாடுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று தீர்ப்பளித்தனர்.