சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்? - கர்நாடக அரசு தீவிர ஆலோசனை


Murugan| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (12:36 IST)
பெங்களூர் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை, வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.

 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில், அவர்கள் உட்பட சிறையில் உள்ள பல விஐபி கைதிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக பல கோடி ரூபாய் பணம் லஞ்சமாக பெறப்படுகிறது எனவும், இதில் சிறைத்துறை டிஐஜி சத்தியநாராயணவிற்கு தொடர்பு உண்டு என கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் கூறினார். இது தொடர்பாக அவர் தனது மேலதிகாரிகளுக்கு கடிதமும் அனுப்பினார்.
 
மேலும், சசிகலா அறை உள்ளிட்ட பல ஆதாரங்களை தான் ஒரு கேமராவில் பதிவு செய்ததாகவும், ஆனால், அதை சிறை நிர்வாகம் அழித்து விட்டதாகவும் அவர் புகார் கூறினார். இதையடுத்து, சிறையில் ஆய்வு நடத்துவதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு மேல்மட்ட குழுவை, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அமைத்தார். 
 
அந்நிலையில், சமீபத்தில் மீண்டும் சிறைக்கு சென்று ஆய்வு நடத்த டிஐஜி ரூபா சென்ற போது, அவருக்கு ஆதரவாக சில கைதிகளும், எதிராக கைதிகளும் கோஷம் எழுப்பினர். அவர் விசாரணை முடித்து விட்டு சென்ற பின்னும், கைதிகள் இரு பிரிவினராக பிரிந்து, தங்கள் அறைக்கு செல்லாமல் போராட்டம் நடத்தினர். அதன் பின் அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். 


 

 
ஒரு பக்கம் சிறப்பு சலுகை குறித்த புகார் மறுபக்கம் கைதிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தால் கர்நாடக அரசுக்கு பொதுமக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சலுகை குறித்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், அரசியல் தலைவராக இருக்கும் சசிகலாவின் பாதுகாப்பு கருதியும், அவரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கர்நாடகத்திற்குள்ளேயே வேறு சிறைக்கு மாற்றுவதெனில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை. ஆனால், டெல்லி புழல் சிறை உள்ளிட்ட வேறு மாநில சிறைக்கு அவரை மாற்றுவதெனில், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :