1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 9 ஆகஸ்ட் 2014 (13:25 IST)

சகோதரருக்கு ஆபரேஷன் நடந்ததால் மேல்சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை - டெண்டுல்கர்

சகோதரருக்கு ஆபரேஷன் நடந்ததால் மேல்சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று டெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார்.
 
கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். டெல்லி மேல்சபையில் நடந்த கூட்டத் தொடரில் டெண்டுல்கர் இதுவரை 3 நாட்கள் மட்டுமே வந்துள்ளார். 40 நாட்கள் அவர் சபைக்கு வரவில்லை. கடைசியாக 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி சபைக்கு வந்தார்.
 
டெல்லி மேல்சபை கூட்டத்துக்கு தொடர்ந்து வராத டெண்டுல்கரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் டெல்லி மேல்சபை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்ட நடிகை ரேகாவும் தொடர்ந்து வராததால் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே டெல்லி மேல்சபை கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து டெண்டுல்கர் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:–
 
எனது சகோதரருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இதன் காரணமாக என்னால் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. எந்தவொரு அமைப்பையும் அவமதிக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.
 
இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து டெல்லி மேல்சபை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கூறும் போது டெண்டுல்கரும், நடிகை ரேகாவும் விதிகளை மீறி நடந்து கொள்ளவில்லை. இதனால் இருவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்ய இயலாது என்றார்.