வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 16 நவம்பர் 2014 (20:16 IST)

ஆந்திராவில் ராஜுவாரி கண்டிகை கிராமத்தை தத்தெடுத்தார் சச்சின்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆந்திரா மாநிலத்தில் உள்ள ராஜுவாரி கண்டிகை கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதியில் ஒரு கிராமத்தை தத்து எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கூடூர் தொகுதியில் உள்ள புட்டம் ராஜுவாரி கண்டிகை கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இந்த கிராமத்தில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சொந்த பணம் மூலம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை சச்சின் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியே 79 லட்சம் நிதி மூலம் அந்த கிராமத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த கிராமத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை பார்வையிடுவதற்காக டெண்டுல்கர் காலை 9 மணிக்கு கார் மூலம் கூடூர் தொகுதியில் உள்ள அவர் தத்து எடுத்த கிராமமான புட்டம் ராஜுவாரி கண்டிகை கிராமத்துக்கு சென்றார். அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார். கிராம மக்களை சந்தித்து பேசிய சச்சின், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கிராமத்தின் நிலைமையை சச்சின் பார்வையிட்டார்.
 
சச்சின் இந்த கிராமத்தில் தனது எம்.பி. நிதியுடன் மக்களுக்கு தேவையான சாலை வசதி, கழிவு நீர் கால்வாய், குடிநீர் குழாய்கள் அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம், ஆடியோ விஷுவல் நூல்நிலையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். அத்துடன் இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக உள்ள கறவை மாடு வளர்த்து பால் விற்பனை செய்வது உள்ளது.
 
எனவே இந்த கிராம மக்களின் வசதிக்காக கால்நடை மருத்துவமனை கட்டி வருகிறார். இதற்கு மேலும் ரூ.3 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். சச்சின் இந்த கிராமத்துடன் நெர்பூர், கொல்லப்பள்ளி ஆகிய 2 கிராமங்களை தத்து எடுக்க இருப்பதாக அவரது பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.