மோடி பிரதமர் வேட்பாளரா ? இல்லையா ? – ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் முடிவு
சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வின் பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னதான் நாட்டை ஆட்சி செய்வது பா.ஜ.க. வாக இருந்தாலும் பாஜக வை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்.தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக எண்ணியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக மோடியை வேட்பாளராக அறிவிக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ் தான் என்றால் அதன் பலம் என்னவென்று யோசித்துப் பாருங்கள்.
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பலமுறை தீவிரவாத இயக்கம் எனத் தடை செய்யப்பட்டும் அதன் பிறகு தடை நீக்கப்பட்டும் வந்த வரலாறு ஆர்.எஸ்.எஸ் – க்கு உண்டு. ஆனால் தற்போதைய பாஜக வின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். –ன் பலம் அதிகமாகி வருவதாகவும் தனது இந்துத்வா தத்துவத்தை நாடு முழுவதும் பரப்ப முனைவதாகவும் சிறுபான்மையினருக்கும் அவர்தம் பண்பாட்டு, உணவு முறைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக ஆர்.எஸ்.எஸ். உருவாகியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சென்னையில் ஜனவரி 5ஆம் தேதி முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கூட்டம் நடைபெற்றுவருகிறது.. 2019 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்களை வகுக்கும் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் எனப் பலத் தரப்பிலும் இருந்து கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி பற்றிய நிலைப்பாடுகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் முக்கியமான விவாதமாக வரவிருக்கும் தேர்தலில் மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா வேண்டாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் மோடி மீதான விமர்சனங்கள், மோடியின் நிறை குறைகள் மற்றும் மோடியின் கடந்த கால செயல்பாடுகள் ஆகியவற்றையும் தீவிரமாக விவாதித்துள்ளனர்.
நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அடுத்தத் தேர்தலில் பாஜக வின் பிரதமர் வேட்பாளராக மோடி வேண்டாம் என்ற் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் யர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.