1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2015 (09:47 IST)

நீர்வழிப் போக்குவரத்தில் நிலக்கரியை எடுத்துச் சென்றால் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி செலவு குறையும்: நிதின் கட்கரி

நிலக்கரியை நதி நீர் வழியாக கொண்டு சென்றால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவு குறையும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


 

 
பல்வேறு ஆறுகளைக் கொண்ட நமது நாட்டில் நீர் வழிப்போக்குவரத்தின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது.
 
எனவே, உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
 
இந்நிலையில், நிலக்கரியை சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை விட உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து வழியாக கொண்டு சென்றால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவு குறையும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், "நீர்வழிப் போக்குவரத்தை நாடு முழுவதும் அதிகரிப்பதன் மூலம், சரக்குப் போக்குவரத்து செலவுகள் குறைவதுடன்  சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
 
எப்போதுமே நீர்வழிப் போக்குவரத்திற்கு செலவு குறைவு. ஒரு எச்பி திறனானது சாலைகளில் 150 கிலோ எடையையும், ரயிலில் 500 கிலோ எடையையும் எடுத்துச் செல்ல முடியும்.
 
ஆனால், நீர்வழி போக்குவரத்தில் ஒரு லிட்டர் எரிபொருளானது ஒரு கிலோ மீ்ட்டருக்கு 105 டன்கள் எடையை கொண்டு செல்ல முடியும் என்று நிதின் கட்கரி கூறினார்.
 
நதி நீரை இணைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.