திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து மறுப்பது பாலியல் குற்றம் ஆகாது! – மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!
திருமணத்திற்கு முன்பான உறவு தொடர்பான வழக்குகள் பல நீதிமன்றங்களில் நடைபெறும் நிலையில் மும்பை நீதிமன்றம் அவ்வாறான ஒரு வழக்கில் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பாலியல்ரீதியான சீண்டல்கள், வன்கொடுமை குற்றங்கள் குறித்த ஏராளமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வழக்கிலும் வழக்கின் தன்மையை பொறுத்து விதவிதமான தீர்ப்புகள் வெளியாகின்றன. இந்த பாலியல் வழக்குகளில் பெரும் சர்ச்சைக்குள்ளாவது திருமண ஆசை காட்டி உடலுறவு கொண்டு ஏமாற்றுவதாக தொடரப்படும் வழக்குகள்.
இந்த வழக்குகளில் இருவரும் விருப்பப்பட்டு உறவுக் கொண்டதை எப்படி பாலியல் குற்றமாக கருத முடியும் என்ற விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தில் இந்த வகை வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது.
2016 முதலாக ஒரு இளைஞரும், இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக இளைஞர் வாக்குறுதி அளித்துள்ளார். பின்னர் இருவரும் உடலுறவில் இருந்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் சில மாதங்கள் கழித்து வேறு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்த இளம்பெண், அந்த இளைஞர் தன்னை திருமண ஆசைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இளைஞர் தரப்பில் தனது பெற்றோர் சம்மதம் இல்லாததாலேயே அந்த பெண்ணை மணம் செய்து கொள்ள வில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமணம் செய்து கொள்வதாக காதலிக்கு கொடுத்த வாக்கை மீறுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாக கருத முடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை மட்டுமே உடல் உறவுக்கு அனுமதித்தற்கான காரணமாக கூறமுடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K