Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பணம் இல்லாததால் செல்லாத 100 ரூபாய்களை அனுப்பும் ரிசர்வ் வங்கி!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 1 டிசம்பர் 2016 (15:40 IST)
ரிசர்வ் வங்கியில் போதுமான பணம் இல்லை என்றும் அழுக்கடைந்த செல்லாத 100 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கியுள்ளது என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் டி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திரதேவ், ”அரசும், ரிசர்வ் வங்கியும் போதுமான ரூபாய் நோட்டுக்கள் உள்ளதாக தவறான செய்திகளை தெரிவிக்கின்றன. ஆனால் போதுமான 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லை.

புதிய 500 ரூபாய் நோட்டு போதுமான அளவு வரவில்லை. இதனால், வரலாற்றில் முதன்முறையாக அழுக்கடைந்த செல்லாத 100 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. அதேபோல் 20, 50 ரூபாய் நோட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், “20 நாட்களுக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர், முனைவர் உர்ஜித் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் போதுமான அளவு பணம் உள்ளது என்றும் அதை வங்கிகள் எடுத்து பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அது உண்மையல்ல. சென்னை ரிசர்வ் வங்கியே போதுமான பணம் இல்லை என பலமுறை தெரிவித்துள்ளது.

பொறுப்புள்ள ஆளுநர் இப்படி மக்களை திசை திருப்பி வங்கிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடாது. பல இடங்களில் வாய்த் தகராறு, கை கலப்பு, தாக்குதல்கள் நடக்கின்றன. ரகசியமாக வைக்க வேண்டும் என்பதால் போதுமான புதிய ரூபாய் நோட்டுக்கள் நவ. 8 க்கு முன் அச்சடிக்க முடியவில்லை எனக் கூறுகின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பே 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிக்கு அனுப்ப முடியும் போது, ஏன் 500 ரூபாய் நோட்டுக்களை அனுப்ப முடியாது? ரகசியம் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :