1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (15:42 IST)

ஆம்புலன்ஸ் ஊழல் - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் மீது சிபிஐ வழக்குப் பதிவு

ராஜஸ்தானில் முந்தைய ஆட்சியில் நடந்த ஆம்புலன்ஸ் ஊழல் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் அமைச்சர் சச்சின் பைலட், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
 

 
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்தபோது, 108 ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்த டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் அறிவிப்பில், ஆம்புலன்சில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததன் மூலம், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ‘ஜிகித்சா ஹெல்த் கேர்’ என்ற நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டு, அந்நிறுவனத்துக்கே டெண்டரும் வழங்கப்பட்டு உள்ளது.
 
அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, 35 மாவட்டங்களில் 450 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த காலகட்டத்தில் ‘ஜிகித்சா ஹெல்த் கேர்’ நிறுவனம் அதிகப்படியான தொகைக்கு ரசீதுகளை சமர்ப்பித்ததாகவும், அவற்றுக்கு, அரசுத் தரப்பில் மறுப்பேதும் தெரிவிக்காமல் உரிய தொகை கொடுக்கப்பட்டதாகவும் மற்றொரு புகார் எழுந்தது.
 
இந்நிலையில், ஜெய்ப்பூர் நகர மேயர் பங்கஜ் ஜோஷி அளித்த புகாரின்பேரில், அசோக் கெலாட் உள்ளிட்டோர் மீது ஜெய்ப்பூரில் உள்ள அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. ஏற்று நடத்த வேண்டும் என்று மாநில அரசு பரிந்துரை செய்தது.
 
அதன் அடிப்படையில், இவ்வழக்கு மீதான விசாரணையை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ. போலீசார், அசோக் கெலாட், ஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவனம், அதன் இயக்குநர்களாக கருதப்படும் சச்சின் பைலட், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், மத்திய முன்னாள் அமைச்சர் வயலார் ரவியின் மகனான கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.