1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 4 மே 2015 (10:17 IST)

ரயில்வே தனியார் மயம் ஆகாது: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி

ரயில்வே தனியார் மயமாக்கப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதிபட கூறியுள்ளார்.
 
இது குறித்து சுரேஷ் பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
ரயில்வே எந்த நிலையிலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது. அது எப்போதும் மத்திய அரசுக்கு சொந்தமானதாகவும், மத்திய அரசால் நிர்வகிக்கப் படுவதாகவும்தான் இருக்கும்.
 
ரயில்வேயின் உரிமையாளரை நாங்கள் மாற்றமாட்டோம். யாரோ சிலருக்காக உயர் மதிப்பு கொண்ட ரயில்வேயை நாங்கள் தனியார் மயமாக்க விரும்பவில்லை.
 
ரயில்வே சிறப்பாக செயல்படுவதற்கும் அதன் மதிப்பை இன்னும் உயர்த்துகிற வகையில், தனியார் முதலீடு மற்றும் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதைத்தான் ரயில்வே இலாகாவில் கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம்.
 
ரயில்வேயை தனியார் மயமாகலாமா? வேண்டாமா? என்று கேள்வி எழுப்புவதே துரதிர்ஷ்டவசமானது. எங்களைப் பொறுத்தவரை ரயில்வே இலாகாவின் சேவை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.
 
தரமான சேவை, சிறந்த தொழில் நுட்பம், லாபகரமான செயல்பாடு ஆகியவற்றை ரயில்வே இலாகாவில் கொண்டு வர எத்தகையை முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அதனைச் செய்வோம்.
 
இதை, எங்களாலேயே இதைச் செய்துகொள்ள முடியும் என்றால் அதை நாங்கள் செய்வோம். எங்களால் முடியவில்லை என்றால் வெளியில் இருந்து முதலீடுகள், வெளித் தொழில் நுட்பம், வெளி முகமைகள் ஆகியவற்றை ஈர்ப்போம்.
 
அப்போதும் நாங்கள் ரயில்வேயின் உரிமையாளரை மாற்றிவிடமாட்டோம். மாற்றத்தை விரும்பாதவர்கள்தான் தனியார் மயம் பற்றிய கேள்வியை எழுப்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
 
ஜப்பானில் மணிக்கு 650 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுவது பற்றி சுரேஷ் பிரபுவிடம் கேட்டபோது, "இது போன்ற தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. எனவே வெளியில் இருந்து சிறந்த தொழில் நுட்ப பங்குதாரர்களை இதற்காக பெற முடியும்.
 
நம்மிடம் இதற்கென பணம் இல்லை என்பதால், பணம் இருப்பவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ள இயலும்"  இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.