இப்படியெல்லாம் கருப்புப் பணத்த ஒழிக்க முடியாது - ரகுராம் ராஜன் அதிரடி
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் “இந்த அறிவிப்பு சரியானது என்று நான் நம்பவில்லை. கருப்புப் பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டுகளை மாற்றுவது சரியான நடவடிக்கை இல்லை. இந்தியாவில் கருப்புப் பணம் வெறும் ரூபாய் நோட்டுகளாக மட்டுமில்லை. தங்கமாக அதிக அளவில் புதைந்து கிடக்கிறது.
மேலும், கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற மக்களிடத்தில் பல வழிகள் உண்டு. அதில் எளிமையான வழி கோவில் உண்டியலில் பணத்தை போடுவது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. என்னுடைய கணிப்பின்படி, கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு விரும்பினால், வரி விதிப்பில் அதிக அளவிலான சலுகைகளை அளிக்க வேண்டும்.
இந்தியாவில்தான் குறைவான வரி விதிப்பு மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதாவது, அதிக வருமானம் பெறுவோருக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வட்டி விகிதம் 33 சதவீதம். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக பட்சமாக 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
எனவே, இவ்வளவு குறைவான வரி விதிக்கப்படும் இந்தியாவில் கருப்பு பணத்தை பதுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் இந்தியர்கள் அதை செய்கிறார்கள்.
எனவே, முறையான வரி விதிப்பு மற்றும் சலுகைகளை அறிவித்தால் கருப்புப் பணத்தை எளிமையாக குறைக்க முடியும்” என அவர் ரகுராம் ராஜன் கூறினார்.