புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (08:27 IST)

கைதாவாரா பிரியங்கா கணவர் ? – காங்கிரஸுக்கு தேர்தல் நெருக்கடி !

சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரராவை கைது செய்ய அமலாக்கத்துறை மும்முரம் காட்டி வருகிறது.

பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா சட்ட விரோதமாக லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கில் அவர் ஆஜராகி வருகிறார்.  மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமினும் பெற்றுள்ளார்.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையில் அமலாக்கத்துறை ‘ராபர்ட் வதேராவை விசாரணைக்கு ஆஜராகுமாறு பல முறை அவருக்கு வாய்ப்பு அளித்தோம். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.. எனவே அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்ற வாதம் வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ராபர்ட் வதேராவை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முறையாக ஆஜராகுமாறு உத்தரவிட்டார். மேலும் அவரை மார்ச் 25 ஆம் தேதி வரைக் கைது செய்ய தடை விதித்து வழக்கையும் ஒத்திவைத்துள்ளனர். மக்களவைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவைக் கைது செய்ய மும்முரம் காட்டுவது காங்கிரஸ் சிக்கலை உருவாக்கியுள்ளது.

ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால் அது காங்கிரஸுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் . அதனால் அமலாக்கத்துறையில் செயலுக்குப் பின்னால் அரசியல் நோக்கம் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதை அமலாக்கத்துறை மறுத்துள்ளது