மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மக்களால் கிடைத்த வெற்றி அல்ல என்றும், இந்த தேர்தல் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களையும் பாஜக கூட்டணி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள் என்றும், மோடி, அமித்ஷா மற்றும் அதானி கூட்டணியே வெற்றி பெற்றது என்றும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல என்றும், இந்த தேர்தல் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 219 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அங்கு ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஷிண்டே தலைமையிலான ஆட்சி அமையும் என்றும், ஷிண்டே இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு, அந்த கூட்டணிக்கு ஆறுதல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Mahendran