வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 மே 2016 (16:05 IST)

விஷம் கலந்த மதுவால்தான் கலாபவன் மணி இறந்தார் : ஆய்வில் வெளியான உண்மை

விஷம் கலந்து கொடுக்கப்பட்ட மதுவை அருந்தியதால்தான் நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார் என்ற உண்மை ஹைதராபாத் தடவியல் துறை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


 

 
கடந்த மார்ச் 6ஆம் தேதி, கலாபவன் மணி தன்னுடைய பண்னை வீட்டில் நண்பர்களுடம் மது அருந்திய போது, உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 
அவருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் இருந்ததாகவும், அந்நிலையில் அவர் மது அருந்தியதால் அவர் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவர் உடலில் மெத்தில் ஆல்கஹால் எனப்படும் மெத்தனால் இருந்தாகவும், அதனாலேயே அவர் உயிரிழந்தார் என்றும் தகவல் வெளியானது.
 
இதனால் அவரது சாவில் மர்மம் நீடித்தது. மேலும், கலாபவன் மணி கொலை செய்யப்பட்டார் என்றும், சரியான விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அவரது சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
இதையடுத்து, கலாபவன் மணியின் உடல் பாகங்களை தடவியல் சோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள தடவியல் ஆய்வுக் கூடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 
 
இதற்கிடையில், அவருடன் மது அருந்திய அவரது நண்பர்கள், அவரது பண்ணை வீட்டில் வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இருந்தாலும், சரியான தடயம் எதுவும் கிடைக்காததால், போலீசார் திணறி வந்தனர்.
 
இந்நிலையில், ஹைதராபாத் தடவியல் துறை ஆய்வில், கலாபவன் மணியின் உடலில் மெத்தில் ஆல்கஹால் எனப்படும் நச்சு கலந்த மருந்து இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மருந்து கள்ளச்சாராயம் எனப்படும் போலி மதுவில் போதைக்காக சேர்க்கப்படும் பொருளாகும். அளவுக்கு அதிகமாக அதை அருந்தினால் கண் பார்வை இழப்பு மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படும். கலாபவன் மணியும் அப்படித்தான் உயிரிழந்துள்ளார் என்று அந்த தடவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
எனவே, அவரது சாவில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு நச்சு கலந்த மதுவை கொடுத்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். 
சம்பந்தபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.