1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (14:03 IST)

இந்திரா காந்தி நினைவு நாளை புறக்கணித்த பிரதமர் நரேந்திர மோடி

இந்திரா காந்தி நினைவு நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு புறக்கணித்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மட்டுமே அரசு சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30–வது நினைவு நாள். ஒவ்வொரு ஆண்டும் அவரின் நினைவு நாளில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், இந்திரா காந்தி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். மேலும், மாநில அரசுகள் சார்பில் கொடுஞ்செயல் ஒழிப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்படும்.
 
ஆனால் இந்த ஆண்டு இந்திரா காந்தி நினைவு நாளை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு பதவியில் உள்ளவர்களில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகிய இருவர் மட்டும் அஞ்சலி செலுத்தினார்கள். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் யாரும் அஞ்சலி செலுத்த வராமல் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.
 
பிரதமர் மோடியும், அமைச்சர்களும் இன்று காலை டெல்லியில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி நடந்த தேச ஒற்றுமை ஓட்டத்தில் கலந்து கொண்டனர். படேல் படத்துக்கும் மோடி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அவரை மோடி தனது டுவிட்டரில் புகழ்ந்தார். அதனுடன் சேர்த்து இந்திரா நினைவு நாளில் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி மாநில அரசுகள் சார்பில் நடைபெறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.