வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (18:07 IST)

தெலங்கானா பேருந்து - ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடாக் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிராத்தனைகள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாய் பேட்டை அருகே பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
 
இது பற்றிய மேலும் விவரம் வருமாறு:
 
தெலங்கானா மாநிலம் காக்கதியா என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.
 
வழக்கம் போல பேருந்தில் மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அந்தப் பேருந்து, மாசாயிபேட்டை ரயில்வே லெவல் கிராசிங் வழியாகச் சென்றது. அந்த லெவல் கிராசிங்கில் கேட் கீப்பர் இல்லை.
 
அப்போது இந்த ரயில் பாதையில் நாம்பேடு பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. அதைக் கவனிக்காத பேருந்து ஓட்டுநர் அந்த லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்றார்.
 
பேருந்து தண்டவாளத்தின் பாதி தூரம் சென்றபோது ரயில் பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
 
இந்தக் கோர விபத்தில், பேருந்தில் இருந்த 12 மாணவர்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படிருந்தவர்களுள் பலர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
ஆளில்லாத லெவல் கிராசிங்கால் இந்த விபத்து ஏற்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
 
மாநில அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர். மாநில அரசு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது.