வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (12:01 IST)

அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு –நிதியமைச்சரானார் பியுஷ் கோயல் !

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சருக்குப் பதிலாக இடைக்கால நிதியமைச்சராக பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையை வாசிப்பார். ஆனால் உடல்நலக் குறைவுக்காரணமாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவுக்கு சிகிச்சைப் பெற சென்றுள்ளதால் அவருக்குப் பதிலாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிரதமரின் ஆலோசனைப்படி அருண் ஜெட்லி வகித்துவந்த நிதியமைச்சர் பொறுப்பு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வசம் தற்காலிகமாக ஒப்படைக்கப்படுகிறது. அருண் ஜேட்லி சிகிச்சை முடிந்து மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பு ஏற்கும் வரை நிதித் துறையை பியூஷ் கோயல் கவனிப்பார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சில சிகிச்சைகளுக்காக அவர் அடிக்கடி சென்று வருகிறார். இம்முறை சென்ற போது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய அவர் வந்துவிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை இன்னும் முழுமையாக சரியாகாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.