1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2016 (10:54 IST)

ரேசன் கடையில் கூடதான் மக்கள் உயிரிழக்கின்றனர்: பாஜகவின் திமிர் பேச்சு

ரேசன் பொருட்களை வாங்கும் போதும் கூடதான் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வினய் சகாஸ்துருபத்தே என்பவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 08ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றவதற்கு கடந்த சில நாட்களாக பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதேபோல், வங்கி ஏ.டி.எம். மையங்களில் போதுமான இருப்பு இல்லாததாலும், நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாய் மட்டும் எடுக்கமுடியும் என்பதாலும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனிடையே, கேரளா மாநிலத்தில் இருவரும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒருவரும் நீண்ட வரிசையில் நின்றதால் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். மத்தியப்பிரதேசத்தில் மட்டும் ரூபாய் நோட்டு பிரச்சனையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோவை மாநிலத்தில் நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள் மீது கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் சகாஸ்துருபத்தே, பணம் மாற்ற மற்றும் பணம் எடுக்க வங்கி, ஏடிஎம்களில் வரிசையில் நிற்கும்போது பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பதில் அளிக்கையில், ”ரேசன் பொருட்களை வாங்கும் போதும் கூடதான் மக்கள் உயிரிழக்கின்றனர்” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவர், ’மத்திய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசை அவமானப்படுத்த முயற்சிக்கின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.