வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (12:41 IST)

கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை..! – பேடிஎம் வெளியிட்ட அறிவிப்பு!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு குறித்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இதுகுறித்து பேடிஎம் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு பணப்பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவும், கூகிள் பே, போன் பெ, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் வழியாகவும் நடந்து வருகிறது. இந்த செயலிகள் மூலம் ரீசார்ஜ், டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் என்பிசிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைக்கு 1% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான அறிவிப்பு மக்களை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த 1% கூடுதல் கட்டணம் பரிவர்த்தனை செயலிகளின் வாலட்டிலிருந்து பரிவர்த்தனை செய்தால் மட்டுமே என கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள பேடிஎம் நிறுவனம், நேரடி (வங்கி டூ வங்கி) பணப்பரிவர்த்தனைகள் எப்போதும் போலவே தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதுபோல வாலட்டுகளில் பணத்தை வைப்பதற்கோ அதை பிற நபர்களுக்கோ அனுப்புவதற்கும் எந்த கூடுதல் கட்டணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.