1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (12:39 IST)

நடிகர் பவன்கல்யாண் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப்பதிவு

தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதியை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் பவன்கல்யாண் ஜனசேனா கட்சியைத் தொடங்கியுள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தில் பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
நிஜாமாபாத் அருகில் உள்ள கமாரெட்டி என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவை கடுமையாக தாக்கிப் பேசினார்.
 
நடிகர் பவன்கல்யாண் பேச்சுக்கு தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் ரவிக்குமார் நிஜாமாபாத் நீதிமன்றத்தில் பவன்கல்யாணுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பவன்கல்யாண் பேசி உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களையும் அவர் இணைத்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சட்டப்பிரிவு 163/A மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் நடிகர் பவன்கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நடிகர் பவன்கல்யாண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.