வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2015 (22:55 IST)

காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர்கள் கைது நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம்

காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையை பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பிரிவினைவாத தலைவர்களை கைது செய்தது கவலை அளிக்கிறது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அலுவலக பெண் செய்தி தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் அறிக்கை ஒன்றில், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் திட்டமிட்டு அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. காஷ்மீரில் 2 வாலிபர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான மற்றும் ஆயுதமற்ற முறையில் போராடியவர்கள் மீது இந்திய பாதுகாப்பு படைகள் கொடூரமாக தாக்குதல் நடத்திய விதத்திற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.
 
புத்காம் மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டதை முறியடிக்கும் வகையில், சையத் அலி ஷா கிலானி மற்றும் மீர்வாய்ஜ் உமர் பரூக் உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத தலைவர்களை அதிகாரிகள் வீட்டு காவலில் வைத்தனர்.
 
அனைத்து கட்சி ஹுரியத் மாநாட்டு தலைவர்களின் தவறான குற்றச்சாட்டின் பேரிலான கைது கவலைக்குரிய விசயம் என அஸ்லாம் கூறியுள்ளார்.  ஐ.நா. சபை தீர்மானங்களால் உறுதியளிக்கப்பட்ட, தங்களுக்குரிய சுயமாக தீர்மானிக்கும் உரிமை குறித்து காஷ்மீரிகள் நடத்தும் போராட்டம் மற்றும் அவர்களது நோக்கத்தை நசுக்கும் கொடூரம் மற்றும் அதிகாரம் வெற்றி பெறாது என அவர் கூறியுள்ளார்.
 
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே தொடர்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை வழியே அமைதிக்கான தீர்வு தேவை என்றும் காஷ்மீரிகளின் விருப்பத்துடன் அவை நடைபெற வேண்டும் என்றும் தொடர்ந்து பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது என அஸ்லாம் கூறியுள்ளார்.  காஷ்மீரிகளுக்கு அரசியல், தூதரக மற்றும் நன்னடத்தை வழியே பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் பெண் செய்தி தொடர்பாளர் அஸ்லாம் கூறியுள்ளார்.