1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2016 (03:59 IST)

டெல்லியில் தனியார் மருத்துவமனையின் சாதனை: வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை

டெல்லியில் எலும்பு முறிந்த வலது காலை விட்டு இடது காலில் அறுவை சிகிச்சை செய்து அதில், இரும்பு தண்டையும் வைத்துள்ளனர். அதிர்ச்சிக்குரிய இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியின் பிரபல தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு டெல்லி மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

 
டெல்லி அசோக் விஹார் பகுதியை சேர்ந்தவர் ரவி ராய்(24) என்பவர் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அருகில் ஷாலிமார் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த எலும்பு மருத்துவ நிபுணர்கள் ரவியின் வலதுகாலை பரிசோதித்தபின் அதில் இரும்புத் தண்டை பொருத்த முடிவு செய்தனர்.
 
இதையடுத்து திங்கள்கிழமை நடந்த அறுவை சிகிச்சையின் போது, வலது காலுக்கு பதிலாக தவறுதலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து இரும்புத் தண்டை பொருத்தி விட்டனர். இந்தச் செய்தி வெளியாகி டெல்லிவாசிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் அந்த தனியார் மருத்துவமனை மீது டெல்லி மருத்துவ கவுன்சில் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
இதற்கிடையே, அந்த அறுவை சிகிச்சை அறையின் மருத்துவர், செவிலியர், உதவியாளர் என அனைவரையும் நிர்வாகம் மறுநாளே பணி நீக்கம் செய்துள்ளது.
 
இது தொடர்பாக விளக்க அறிக்கையும் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. டெல்லியில் அரசு மற்றும் பிரபல தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது வழக்கமாக மாறி வரும் நிலையில், இவற்றில் பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் செய்வது இல்லை. எனினும் டெல்லி மருத்துவ கவுன்சிலில் இந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி வரை 143 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 253 புகார்கள் மருத்துவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.