1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (10:07 IST)

ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி உடைந்தது

ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஞாயிற்றுக்கிழமை உடைந்தது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.
 
இம்மாநிலத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, சைபுதீன் சோஸ் ஆகியோர் ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.
 
இதுகுறித்து அவர்கள் நிருபர் களிடம் கூறும்போது, “கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இம்முடிவுக்கு வந்தோம்” என்றனர்.
 
காங்கிரஸ் தலைவர்களின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
 
அவர் தனது அறிவிப்பில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை 10 நாட்களுக்கு முன் சந்தித்து, அக்கட்சி அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன். வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவரிடம் கூறினேன்.
 
தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க முடியாததற்கான காரணங்களை அவரிடம் விளக்கினேன். எங்கள் முடிவு சந்தர்ப்பவாத செயலாக பார்க்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே இதை நாங்கள் வெளியில் அறிவிக்கவில்லை” என்றார்.
 
2008 ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அரசு உருவானது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் இக்கூட்டணி படுதோல்வி அடைந்தது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் 3 இல் பாஜகவும், 3 இல் மக்கள் ஜனநாயக கட்சியும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.