1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (12:51 IST)

ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 
 
ஹரியானா மாநிலத்தில் லோக் தளம் கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா முதலமைச்சராக இருந்த போது கடந்த 2000ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 206 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
 
போலி ஆவணங்கள் தயாரித்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 
 
இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையியல், ஆசிரியர் தேர்வில் ஊழல்கள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஓம்பிரகாஷ் சவுதாலா, அவர் மகன் அஜய் சவுதாலா உள்பட 55 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு 55 பேர் மீதும் கடந்த 2008 ஆம் ஆண்டு சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. 
 
இது குறித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. 
 
அந்தத் தீர்ப்பில், ஓம்பிரகாஷ் சவுதாலா, அஜய் சவுதாலா இருவரும் ஊழல், முறைகேடுகள் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி வினோத்குமார் தீர்ப்பளித்தார்.
 
மேலும் இந்த வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சஞ்சீவ்குமார், வித்யாதர், செர்சிங் பத்சமி உள்பட 7 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். அதன்படி மொத்தம் 9 பேர் 10 ஆண்டு தண்டனை பெற்றுள்ளனர். மற்ற 46 பேருக்கும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
 
சி.பி.ஐ. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 55 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
 
கடந்த 2 ஆண்டுகளாக விசாரிக்கபட்டுவந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.
 
மேலும், மற்ற 53 பேரின் தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.