சிம் தேவை இல்லை: இனி செயலி மூலமே போன் பேசலாம்: பி.எஸ்.என்.எல் அசத்தல்
செல்போனில் ஒருவருக்கு போன் பேச வேண்டும் என்றால் சிம் அவசியம் என்ற நிலையில் சிம் இல்லாமல் செயலி மூலமே போன் பேசவும், வரும் கால்களை அட்டெண்ட் செய்யவும் உள்ள சேவையை பி.எஸ்.என்.எல் தொடங்கியுள்ளது. இதற்காக விங்ஸ் என்ற செயலி உருவாக்கபப்ட்டுள்ளது.
இந்த விங்ஸ் செயலியை செல்போன், கம்ப்யூட்டர் என இரண்டிலும் இன்ஸ்டால் செய்து எந்த ஒரு நெட்வொர்க்கின் செல்போனுக்கும் பேச முடியும். இதற்காக ஆரம்ப கட்டணம் ரூ.1099 செலுத்தினால் போதும். ஒரு ஆண்டு முழுவதும் எவ்வளவு கால்கள் வேண்டுமானாலும் இலவசமாக பேசி கொள்ளலாம். ஆனால் இந்த வசதி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் bsnl.co.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆதார் கார்டு எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் ரூ.1,099 என்ற கட்டணத்தை கட்டிவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் நம்பர் போன்று 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் இந்த சேவையை தொடங்க வாடிக்கையாளரின் இமெயிலுக்கு ஒரு 16 இலக்க ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். அந்த ரகசிய எண்ணை ngn.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால், ‘விங்க் செயலி செயல்பட தொடங்கும் என பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.