1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (13:38 IST)

ஆந்திராவில் புயல் பாதித்த மாவட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை: சந்திரபாபு நாயுடு உத்தரவு

வங்கக் கடலில் உருவான ‘ஹூட் ஹூட்’ புயல் கடந்த 12 ஆம் தேதி ஆந்திராவை தாக்கியது. புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதவரி ஆகிய 4 மாவட்டங்கள் சின்னாபின்னமாகி உருக்குலைந்து போனது. வீடுகள் இடிந்தது. பல்லாயிரக் கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் அடிமண்ணோடு சாய்ந்தது.
 
மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்றும் பல இடங்களில் மின் சப்ளை கிடைக்கவில்லை. இந்த நிலையில் புயலால் பாதித்த மாவட்டங்களில் தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்க ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
 
விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பட்டாசு கடையை திறக்க அனுமதி வழங்கவில்லை.
 
இது பற்றி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:–
 
புயல் பாதித்த மாவட்டங்களில் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
 
மரங்கள் முறிந்ததால் சாலை முழுக்க இலை, சருகுகள் உதிர்ந்து கிடக்கிறது. இதில் பட்டாசு பொறிபட்டு தீ விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது.
 
எனவே யாரும் தீபாவளியை கொண்டாட பட்டாசு வெடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி அமைதியாக கொண்டாடுங்கள். தீபாவளி கொண்டாட அரசு சார்பில் அகல் விளக்கும், எண்ணையும் வழங்கப்படும்.
 
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
 
புயல் பாதித்த மாவட்டங்களில் கிராமப்பகுதி மக்களுக்கு உணவு பொருள் கூட கிடைக்கவில்லை. உடமைகளை இழந்து தவிக்கிறார்கள்.
 
அவர்கள் சோகத்தில் இருக்க இன்னொரு புறம் மக்கள் உற்சாகமாக கொண்டாடுவது தேவையற்றது. பட்டாசுக்கு செலவழிக்கும் பணத்தை இல்லாத ஏழைகளுக்கு வழங்கி உதவி செய்ய மக்கள் முன் வர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.