1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (09:40 IST)

நித்யானந்தா மீது பெண் சீடர் கற்பழிப்பு புகார்: நீதிமன்றத்தில் ஆஜரானார் நித்யானந்தா

பெண் சீடர் கொடுத்த கற்பழிப்பு புகார் தொடர்பான வழக்கில் ராமநகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜரானார்.
 
ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஆபாசமாக இருக்கும் காட்சிகள் தொலைகாட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் நித்யானந்தா மீது, அவருடைய ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரான ஆர்த்தி ராவ் என்பவர் பிடதி காவல் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். 
 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை ராமநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி ராமநகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
இந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி மஞ்சுளா, வழக்கு விசாரணையை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.
 
அதன்படி நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையில் ராமநகர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நித்யானந்தா ஆஜரானார்.
 
மேலும், நித்யானந்தாவின் சீடர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நித்யானந்தா சார்பில் வழக்கறிஞர் முத்து மல்லையா ஆஜராகி வாதாடினார்.
 
அப்போது "இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தில் இருப்பதால், அந்த ஆவணங்களின் மீதான பரிசீலனை அறிக்கை வரும்வரையில் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும்" என்று வாதிட்டார். 
 
இதைத் தொடர்ந்து, அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.