வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (20:03 IST)

இந்திய-சீன எல்லையில் அமைதியை பராமரிப்பது அவசியம்: மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்கள் மத்தியில் பேசினர்.
 
இந்திய-சீன வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் - சீன வர்த்தக அமைச்சருக்கிடையே ஒப்பந்த பரிமாற்றம் நடைபெற்றது. இந்தியா - சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரயில்வே துறையில் சீன ஒப்பந்தம் தொடர்பாக மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்திய-சீன எல்லையில் அமைதியை பராமரிப்பது அவசியமானது என்று குறிப்பிட்டார். மேலும் இரு நாட்டு உறவில் நம்பிக்கை ஏற்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார். இரு தரப்பு உறவும் நம்பிக்கை அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்றும் மோடி பேசினார்.
 
மேலும் பேசிய பிரதமர், ஒரு நாடு மற்றொரு நாட்டின் கவலையை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். சீனாவுடன் அனைத்து நிலைகளிலும் உறவு பரிமாற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி கூறினார்.
 
இந்திய தொழில்துறையில் சீனாவின் முதலீட்டை வரவேற்பதாக மோடி தெரிவித்துள்ளார். இருநாட்டு பொருளாதார உறவை மேலும் மேம்படுத்த முடியும் என கருதுவதாக கூறிய மோடி, சீனாவுடனான உறவுக்கு தாம் பெரும் முக்கியத்துவம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரு தொழில் பூங்காக்களில் சீனா முதலீடு செய்ய உள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து பேசிய சீன அதிபர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சீனாவிற்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார். மோடியுடன் நடத்திய பேச்சு பயனுள்ளதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.