வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (12:53 IST)

அல்கொய்தா மிரட்டல் எதிரொலி: நரேந்திர மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளதால் அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். "யுடியூப்" பில் சுமார் 9 நிமிடம் ஓடும் வீடியோவில், ஆசிம் உமர் என்பவன் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடி பெயரை குறிப்பிட்டு, தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 தினங்களாக இது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், நரேந்திர மோடி பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பங்கேற்கும் கருத்தரங்கங்கள், விழாக்களில் எத்தகைய பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிப்பது என்று மறு ஆய்வு செய்யப்பட்டது.
 
நரேந்திர மோடி டெல்லியை விட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்லும் போது குறைந்தபட்சம் அவருக்கு 5 முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நரேந்திர மோடி செல்லும் பாதைகளில் கண்காணிப்பை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இம்மாதம் 9 ஆம் தேதி நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்திற்குச் செல்லவுள்ளார். அப்போது, அவருக்கு 5 அடுக்கு உயர்மட்ட பாதுகாப்பு கொடுக்கும்படி கொல்கத்தா காவல்துறையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அதன்படி, நரேந்திர மோடி கொல்கத்தாவில் இறங்கியதும் அவருக்கு சுமார் 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அத்துடன், இது குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து சிறப்பு கமாண்டோ படை சில தினங்களில் மேற்கு வங்க மாநிலத்துக்குச் செல்லவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.