1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (19:32 IST)

அம்பேத்கர் ரிங்டோன் வைத்திருந்த தலித் இளைஞரை அடித்துக் கொன்ற 8 ஆதிக்க ஜாதி வாலிபர்கள்: காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை

மஹாராஷ்ட்ரா மாநிலம் ஷீரடியில் அம்பேத்கர் பாடலை செல்போனில் ரிங்டோனாக வைத்திருந்த தலித் வாலிபரை 8 பேர் கொண்ட அடித்துக் கொலை செய்தனர்.
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸிங் மாணவர் சாகர் ஷெஜ்வால் திருமண விழாவில் கலந்து கொள்ள ஷீரடிக்கு சென்றுள்ளார். கடந்த 16 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு அவர் தனது உறவினர்கள் 2 பேருடன் உள்ளூரில் உள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருக்கையில் சாகரின் செல்போன் ஒலித்துள்ளது.
 
தலித் சமூகத்தை சேர்ந்த சாகர் அம்பேத்கர் பற்றிய பாடலை ரிங்டோனாக வைத்துள்ளார். அம்பேத்கர் பாடல் ஒலித்ததை பார்த்து கடுப்பான 8 பேர் அவரை பீர் பாட்டிலால் அடித்து பைக்கில் ஏற்றி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் சாகரை அடித்து பைக்கை ஏற்றி கொலை செய்துள்ளனர்.
 
அன்று மாலை 6.30 மணிக்கு ரூய் கிராமம் அருகே சாகரின் உடல் நிர்வாணமாக கிடப்பதை மக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சாகரின் உடலில் 25 இடங்களில் காயம் இருந்துள்ளது. மராதா மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த அந்த 8 பேர் சாகரின் உடல் மீது மீண்டும் மீண்டும் பைக்கை ஏற்றி சிதைத்துள்ளனர்.
 
மதுபானக் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் சாகரை தாக்கிய 8 பேரின் உருவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷால் கோடே, சோம்நாத், ரூபேஷ் வாதேகர், சுனில் ஜாதவ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள 4 பேரை தேடி வருகின்றனர். ஷீரடி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானக் கடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
இது பற்றி கடையின் மேலாளர் கூறுகையில், அந்த 8 பேர் சாகரை அடிக்கத் துவங்கியதும் நான் மதியம் 1.45 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் அளித்தேன். ஆனால் நெடுநேரமாகியும் அவர்கள் வரவில்லை என்றார். சாகரின் உறவினர்கள் கடையில் இருந்து தப்பியோடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும் பலனில்லை. காவல்துறையினர் ஆதிக்க ஜாதியினருக்கு சாதகமா செயல்பட்டனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது என்று அப்பகுதி மக்களும், சாகரின் உறவினர்களும் காவல்துறையினரை குற்றம்சாட்டுகின்றனர்.