முல்லைப் பெரியாறு அணை வழக்கு: அவசர சட்டம் இயற்றிய கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில், அவசர சட்டம் நிறைவேற்றிய கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம் நீதிபதிகள், அணை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றியதற்காக கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு கடந்த 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்கும் வகையில், கேரள அரசு மாநில சட்டசபையில் அணை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு புறம்பானது என்றும், எனவே அது செல்லாது என்றும் அப்போது கூறினார்கள்.
தீர்ப்பின் போது அவர்கள் கூறியதாவது:-
இந்திய அரசியல் சாசனத்தின்படி நிர்வாகம், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு தனித்தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றின் அதிகாரத்தில் மற்றொன்று குறுக்கிடக்கூடாது. சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது.
நாடாளுமன்றமோ அல்லது மாநில சட்டமன்றங்களோ சட்டத்தில் திருத்தம் மட்டும்தான் கொண்டு வர முடியுமே தவிர, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பையோ அல்லது பிறப்பிக்கும் உத்தரவையோ செல்லாதது ஆக்க முடியாது. அரசியல் சாசனத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறி சட்டம் இயற்றப்பட்டால், அது செல்லாதது என்று நீதிமன்றம் அறிவிக்க முடியும்.
கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடும் முயற்சி ஆகும். எனவே அந்த சட்டம் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்பதால் செல்லாது. மக்களின் பாதுகாப்பு கருதி அணை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியதாக கேரள அரசு கூறுவதை ஏற்க முடியாது.
கூட்டாட்சி அமைப்பில், மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும் போது, நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டசபைகளால் அதற்கு தீர்வு கண்டுவிட முடியாது. சட்ட விதிமுறைகளின்படிதான் அவற்றுக்கு தீர்வுகாண முடியும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.