வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (16:10 IST)

தியேட்டருக்கு ஸ்னாக்ஸ் கொண்டு போகலாமா? – குழப்பத்தில் திரையரங்குகள்!

தனியார் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள், தண்ணீர் வெளியிலிருந்து கொண்டு வருவதற்கு தடை எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு பட திரையரங்குகளோ அல்லது மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளோ எங்கு சென்றாலும் வெளியிலிருந்து வாங்கி வரும் உணவு பொருட்களையோ, தண்ணீர் பாட்டில்களையோ உள்ளே எடுத்து செல்ல திரையரங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. திரையரங்கிற்குள் இருக்கும் கேண்டீனில்தான் திண்பண்டங்களை வாங்கி கொள்ள வேண்டும். ஆனால் திரையரங்கிற்குள் விற்கப்படும் பொருட்கள் வெளியே விற்பதை விட இரண்டு மடங்கு விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

வெவ்வேறு மாநிலங்களில் திண்பண்டங்கள் அல்லது தண்ணீரை உள்ளே அனுமதிக்காத திரையரங்குகள் மீது பலர் வழக்கு தொடுத்துள்ளனர். ஒவ்வொரு வழக்கிலும் அந்தந்த மாநில உயர்நீதி மன்றங்கள் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியுள்ளன. இதனால் இதுகுறித்த தெளிவான விதிமுறை என்ன என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நபர் ஒருவர் கோரியிருக்கிறார்.

அதில் கிடைத்த தகவலின் படி சினிமா விதிமுறைகள் சட்டம் 1955ன் படி திரையரங்கிற்குள் திண்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை என தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்குகளில் பெரும்பாலும் திரையரங்கிற்குள்தான் பொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என நீதிமன்றங்கள் பல கூற்றியிருக்கும் நிலையில், ஹைதராபாத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய மல்டிப்ளக்ஸ் அசோசியேசன் படம் பார்ப்பவர்கள் உணவு பொருட்கள் உள்ளே கொண்டு வருவதை முற்றிலுமாக தடுக்கவில்லை எனவும், அத்தியாவசியமான தண்ணீர் தவிர மற்ற சில ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத உணவு பொருட்கள், வாசனை நிறைந்த உணவு பொருட்களால் சக பார்வையாளருக்கு தொல்லை ஏற்படும் என்பதால் அனுமதிப்பதில் சில நெறிமுறைகளை கையாள்வதாகவும் கூறியுள்ளனர்.