1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (18:11 IST)

மாட்டிறைச்சி உண்ணாமல் வாழமுடியாதவர்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - பாஜக அமைச்சர் முக்தர்

மாட்டிறைச்சி உண்ணாமல் வாழமுடியாதவர்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து கண்டணங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.  
 
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக்  கூட்டணி அரசின் ஓராண்டு சாதனை குறித்து தனியார் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் பாஜக சார்பாக கலந்துகொண்ட  நாடாளுமன்ற விவகாரத் துறைக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி பேசினார்.
 
அப்போது, பாஜக ஆட்சியில் மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை, அதனால் அந்த மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் இறைச்சித் தொழில் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
 
அப்போது மாட்டிறைச்சியை உண்போர் அதிகம் வாழும் கோவா, ஜம்மு, கேரளா ஆகிய பகுதிகளில் இதே தடையை கொண்டுவர பாஜக முனைப்புடன் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அகில இந்திய முஸ்லிம் அமைப்பு தலைவர் ஒவைஸிக்கு பதில் அளித்த நக்வி, "இந்த தடை லாபம் நஷ்டம் சார்ந்தது அல்ல. இது முற்றிலும் இந்துக்களின் நம்பிக்கை சார்ந்தது.
 
மாட்டிறைச்சி உண்ணாமல் உயிர்வாழ முடியாது என நினைப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அல்லது அரபு நாடுகளுக்குச்  செல்லலாம். உலகில் மாட்டிறைச்சி கிடைக்கும் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்" என்றார்.
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் நக்வியின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ட்விட்டர் குறும்பதிவு தளத்தில் #Go to Pakistan என்ற ஹேஷ்டேகில் நக்விக்கு எதிரான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.