1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 21 அக்டோபர் 2014 (14:18 IST)

ஹரியானா முதல்வர் மனோகர்லால் கத்தார்: பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாகத் தேர்வு

ஹரியானாவில் அமையப்போகும் புதிய பாஜக அரசின் முதலமைச்சராக மனோகர்லால் கத்தார் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்றதையடுத்து அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்வதற்காக சண்டிகரில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
 
இதில், ஹரியானாவின் புதிய முதல்வராக, அதாவது பாஜக சட்டமன்ற தலைவராக, மனோகர்லால் கத்தார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  பஜன்லாலுக்குப் பிறகு கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்னர் ஜாட் இனத்தவரல்லாத ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மனோகர்லால் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர். 1980 முதல் 1994 வரை இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொண்டாற்றி வந்துள்ளார். பின்னர் பாஜகவில் சேர்ந்த அவர் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியாளராக இருந்துள்ளார். 60 வயது நிரம்பிய அவர் கர்னல் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.