வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 21 ஜூலை 2014 (16:49 IST)

காங்கிரஸ் அரசை மிரட்டிய தமிழகக் கட்சி: மார்கண்டேய கட்ஜூ குற்றச்சாட்டு

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாகக் குற்றம் சாற்றியுள்ளார்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜூ, தனது பதவி காலத்தில் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புக்களை அளித்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அடைந்தவர். தற்போது இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது கூடுதல் நீதிபதி நியமனத்தில் பல குளறுபடிகள் நடைபெற்றது.

கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தது. இது குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.சி.லஹோதிக்கு கடிதம் ஒன்று எழுதினேன்.
நான் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார். உளவுத்துறையின் அறிக்கையின்படி நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மை என்பது நிரூபணமானது.

அதனால் கூடுதல் நீதிபதியாக இருந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தலைமை நீதிபதி எனக்கு பதில் அனுப்பி இருந்தார்.

அவரைத் தவிர மற்ற 6 கூடுதல் நீதிபதிகள் அனைவரும் நிரந்தர நீதிபதிகளாக பணியமர்த்தப்பட்டனர். கூடுதல் நீதிபதி குறித்த புலனாய்வு விசாரணை அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு தான் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங், தமிழக கட்சியின் அமைச்சரால் நேரடியாகவே மிரட்டப்பட்டார்.

இதையடுத்து, காங்கிரஸ் மத்திய அமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேச, அந்த கூடுதல் நீதிபதியின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

அடுத்தடுத்து அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதோடு, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டும், வேறொரு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதுதான் நமது நாட்டின் தற்போதைய நிலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வெளியிட்ட அறிக்கை மாநிலங்களவையில் எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இது குறித்து மதியத்துக்குப் பிறகு விவாதிக்கப்படும் என்று அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியதை ஏற்றுக் கொள்ளாமல் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.