1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2015 (16:02 IST)

நிலக்கரி முறைகேட்டில் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.
 
இது தொடர்பாக சிபிஐ பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ நீதிமன்றத்தில் அவ்வப்போது விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன. 
 
இதில் மன்மோகன்சிங் 2005ல் நிலக்கரி சுரங்க இலாகா பொறுப்பை கவனித்த போது ஹிண்டால் கோ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுமாறு சிபிஐக்கு நீதிமன்றன் உத்தரவிட்டது. அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் மன்மோகன் சிங்கிடம் வாக்குமூலம் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 
 
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மன்மோகன் சிங் மீது ஊழல், சதி, நம்பிக்கை துரோகம் ஆகிய 3 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி மன்மோகன் சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. 
 
ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்கு முதல் முறையாக சம்மன் அனுப்பப்பட்டதால் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பப்பட்டது பழி வாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. 
 
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் அந்தக்கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் மன்மோகன்சிங் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மன்மோகன்சிங் முடிவு செய்தார். 
 
அதன்படி கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மன்மோகன் சிங்குக்கு சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
 
சிபிஐ நீதிமன்றத்தில் அவர் மீதான விசாரணைக்கும் தடைவிதிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் மற்றும் தொழில் அதிபர் குமார்மங்கலம் பிர்லா உள்பட 5 பேருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கும் அவர்கள் மீதான விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
 
முன்னதாக இந்த வழக்கில் மன்மோகன் சிங் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வக்கீலுமான கபில்சிபில் ஆஜரானார். அவர் நாட்டின் பிரதமருக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அவரது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை சட்ட விரோதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வாதிட்டார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மன்மோகன் சிங்குக்கு தற்காலிகமாக 3 வார காலத்துக்கு நிம்மதி கிடைத்துள்ளது.