1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (15:43 IST)

தொடரும் அவலம் ; சிகிச்சைக்கு மறுப்பு: இறந்த மகனை தோளிலேயே தூக்கி சென்ற தந்தை

இறந்த மகனை தோளிலேயே தூக்கி சென்ற தந்தை

அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால், இறந்த மகனை தந்தை தோளிலேயே தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சமீபத்தில்தான் ஓடிசா மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்த தனது மனைவியின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்சு வசதி தரப்படாததால், அவரின் உடலை அவரின் கணவர் தோளிலேயே தூக்கி சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை கிளப்பியது.
 
இந்நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் கான்பூரில் நடந்துள்ளது. பசல்கஞ்ச் என்ற பகுதியில் வசிக்கும் சுனில்குமார் என்பவரின் மகன் அன்ஸ்(12)க்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. உள்ளூர் சிகிச்சை பார்த்து குணமாகாததால், தன் மகனை கான்பூரில் உள்ள லால லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
 
கடுமையான காய்ச்சல் இருந்த மகனை தனது தோளிலேயே தூக்கிச் சென்றுள்ளார் சுனில்குமார்.  ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அங்கிருந்து 250 மீட்டர் துரமுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.  தன்னுடைய மகன் உடல்நிலை மோசாகக உள்ளது. எனவே தயவு செய்து இங்கேயே அவனுக்கு சிகிச்சை அளியுங்கள் என்று சுனில்குமார் மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை.
 
அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் வசதி கேட்டுள்ளார் சுனில். அதையும் அவர்கள் தர மறுத்துவிட்டனர். எனவே வேறு வழியின்றி, சுனில்குமார் மீண்டும் தன் மகனை தோளில் தூக்கி சுமந்தபடி அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அன்ஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சுனில்குமார் தோளிலேயே அவன் உயிர் பிரிந்திருக்ககூடும் என தெரிகிறது. 
 
கதறி அழுத சுனில்குமார், மீண்டும் தன் மகனின் உடலை தோளில் சுமந்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
 
மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் இப்படி ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளும் தொடர் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.