வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (10:51 IST)

சாரதா நிதி நிறுவன மோசடி: திரிணாமூல் எம்.பி. கைதுக்கு மம்தா கண்டனம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சிரின்ஜாய் போஸ் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சிரின்ஜாய் போஸிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, நிதி மோசடியில் போஸ் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சிரின்ஜாய் போஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
 
மேலும், அவரது வங்கிக் கணக்குகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் முடக்கியுள்ளனர். போஸைத் தொடர்ந்து, மேற்குவங்க ஜவுளித் துறை அமைச்சரிடமும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சோமென் மித்ராவிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 
இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, ''இந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகளும், செபி அமைப்பினரும் கடந்த இடதுசாரி கட்சி ஆட்சியின்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள். இடதுசாரிகளும், பா.ஜ.க.வுமே இதற்கு காரணம். சாரதா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் ஐந்து லட்சம் பேருக்கு பணத்தை திரும்ப கொடுக்க எனது அரசு நடவடிக்கை எடுத்தது" என்றார்.