வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (19:28 IST)

மகாராஷ்டிரா தேர்தல்: சிவசேனா - பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சிவசேனா - பா.ஜ.க. இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதுவரை நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
 
வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைகளை அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் நீண்ட காலம் கூட்டணிக் கட்சிகளாக விளங்கும் சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே முதல்வர் பதவி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் நிலவியது.
 
கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்த நிலையில், மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் இரு கட்சிகளும் சமமாக பிரித்துக்கொள்ளலாம் என பா.ஜ.க. கூறியது. ஆனால் அதனை ஏற்க சிவசேனா மறுத்துவந்த நிலையில், பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தங்களுக்கு 135 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியது.
 
ஆனால், அதனையும் சிவசேனா ஏற்கமறுத்தது. 151 இடங்கள் சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கு 119 தொகுதிகளும், 18 தொகுதிகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். இவ்வாறு இரு கட்சிகளும் தங்களது நிலையில் உறுதியாக இருந்துவந்ததால் கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தலையிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி பா.ஜ.க.வுக்கு 130 தொகுதிகளை ஒதுக்க சிவசேனா ஒப்புக்கொண்டது. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கியதுபோக மீதமுள்ள 151 இடங்களில் சிவசேனா போட்டியிடுவது என்று தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சித் தலைவர்களும் விரைவில் செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டி வெளியிட உள்ளனர். அதே சமயம் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.