1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 14 செப்டம்பர் 2014 (14:51 IST)

கூடுதலாக 'சீட்' கேட்டால் கூட்டணி முறியும்: பா.ஜ.வுக்கு சிவசேனா எச்சரிக்கை

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிக 'சீட்'  கேட்டால் கூட்டணி முறியும் என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்றுதான் வெளியிட்டது.
 
இதனையடுத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைகளை அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் நீண்ட காலம் கூட்டணி கட்சிகளாக விளங்கும் சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே முதல்வர் பதவி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் நிலவுகிறது. கூட்டணி வெற்றிபெற்றால் முதல்வர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. 
 
மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் தங்களுக்கு இந்த முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. அத்துடன் சிவசேனா தனக்கான தொகுதிகளில், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. கோருகிறது.
 
அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு கிடைத்த வெற்றியை முன்வைத்து பா.ஜ.க. இந்த கோரிக்கையை முன்வைப்பதாக தெரிகிறது. இத்தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க. 23, சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 
 
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்கள் கேட்பது குறித்து சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா' வில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், " கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் வெற்றி குறித்துதான் கனவு காணவேண்டும். அதற்கு அனைத்து கட்சிகளும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையை கைவிட வேண்டும். அதிக இடங்கள் கிடைத்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்று கூறுவது சரியானதல்ல. 
 
அதிக இடங்களுக்கு ஆசைப்படுவது கூட்டணி முறிவுக்கு வழிவகுத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகிறோம். ஒரு கட்சிக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே கிடைத்தால் கூட ஆட்சியில் உரிய பங்கு அளிக்கப்படும். ஆனால் அதற்கு முதலில் ஆட்சிக்கு வருவது அவசியம் ஆகும்" என்று ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.