வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (03:30 IST)

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


 

 
சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா'வுக்கு உத்தவ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
கடந்த ஜூன் மாதத்துடன், சிவசேனை கட்சி உதயமாகி 50 ஆண்டுகள் ஆகி விட்டன. இதில் பாதிக் காலம், அதாவது 25 ஆண்டுகள் பாஜகவுடன் சிவசேனை கூட்டணி அமைத்துள்ளது. 25 ஆண்டுகள் என்பது அதிக காலம் ஆகும். இக்காலத்தில் இரு கட்சிகளும் கைகோத்து இணைந்து செயல்பட்டன.
 
ஆனால், இந்தக் கூட்டணியில் சில வேண்டத்தகாத சம்பவங்கள் நடந்து விட்டன. முந்தைய தேர்தல்களில் (சட்டப் பேரவைத் தேர்தல்) 2 கட்சிகளிடையேயான கூட்டணி முறிந்ததும் இதில் அடங்கும்.
 
இந்தச் சம்பவங்களை வைத்துப் பார்க்கையில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை சிவசேனை வீணடித்து விட்டதாக நான் நினைக்கிறேன்.
 
முன்பு பாஜக, சிவசேனை இடையேயான கூட்டணி, ஹிந்துத்துவக் கொள்கையை அடித்தளமாக கொண்டு அமைந்திருந்தது. ஆனால், தற்போது எதன் அடிப்படையில் கூட்டணி ஏற்பட்டுள்ளது என்பதை
நாங்கள் முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனினும், முதல்வராக புதிதாக பதவியேற்றிருக்கும் தேவேந்திர பட்னவீஸுடன் நான் தொடர்பில் உள்ளேன்.
 
அவரது இடைவிடாத பணிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். இதேபோல், எதிர்காலத்திலும் அவர் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன் என்றார் உத்தவ் தாக்கரே. அப்போது அவரிடம், பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, ஏன் அக்கட்சியின் மீதும், அக்கட்சி தலைமையிலான மத்திய, மகாராஷ்டிர அரசுகளின் மீதும் குற்றம்சுமத்துகிறீர்கள்? எனக் கேள்வியெழுப்பப்பட்டது.
 
அதற்கு உத்தவ் தாக்கரே பதிலளிக்கையில், "கூட்டணிக் கட்சியை சிவசேனை இதுவரை மிரட்டியதோ அல்லது முதுகில் குத்தியதோ கிடையாது' என்றார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்