வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (11:53 IST)

லிபியாவில் இருந்து 44 கேரள செவிலியர்கள் நாடு திரும்பினர்

லிபியாவில் பணியாற்றிவந்த கேரளாவைச் சேர்ந்து செவிலியர்கள் 44 பேர் பத்திரமாக கேரள மாநிலம் கொச்சினை வந்தடைந்தனர்.

உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வரும் லிபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர்களைப் பத்திரமாக தாய்நாட்டுக்கு அழைத்து வர சிறப்பு விமானம் ஒன்றினை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடந்த வாரம் உம்மன் சாண்டி கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், ‘லிபியாவில் பணியாற்றி வரும் கேரள செவிலியர்களில் 58 பேர் ஏற்கனவே அங்கிருந்து சாலை மார்க்கமாக துனிசியா நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், லிபியாவில் இருக்கும் மேலும் 48 கேரள செவிலியர்கள் இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்‘ தெரிவித்தார்.

மேலும், ‘துனிசியாவில் இருந்து அவர்கள் அனைவரையும் கட்டணம் இன்றி தாயகத்துக்கு அழைத்து வர மத்திய அரசு சிறப்பு விமானம் ஒன்றினை ஏற்பாடு செய்து தர வேண்டும்‘ எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, துனிசியாவில் இருந்து 44 கேரள செவிலியர்கள் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் விமானம் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்பட்டனர்.

கொச்சின் வந்தடைந்த அவர்களை உறவினர்களும், மாநில அரசு அதிகாரிகளும் உற்சாகத்துடன் வரவேற்றனர். ஈராக்கில் சிக்கித் தவித்த இந்திய செவிலியர்கள் கடந்த மாதம் பத்திரமாக தாய்நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.