சிகிச்சையின்றி உயிரிழந்த தமிழர் - மன்னிப்பு கோரிய கேரள முதல்வர்


Murugan| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (18:08 IST)
கேரளாவில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் தமிழக இளைஞர் சிகிச்சையின்றி மரணமடைந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

 
கேரளாவின் கொல்லம் பகுதியில் கடந்த 6ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் சாலை விபத்து ஒன்றில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு பார்வையாளர்கள் யாரும் இல்லை என கூறி சிகிச்சை அளிக்க மறுத்தனர். 
 
பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவமனையை அனுகியபோதும் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அங்கு சுவாச குழாய் வசதி இல்லை என கூறி திரும்பி அனுப்பினர்.  இதன் காரணமாக சுமார் 7 மணி நேரம் ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய முருகன் கடந்த 7ம் தேதி காலை 6 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியிருந்த நிலையில், இதற்காக கேரள முதல்வர் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம்  கேரள மக்களின் சார்பாக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார்” எனவும், 
 
“விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் - பினராயி விஜயன்” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :