வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2014 (16:34 IST)

டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜ.க. குதிரை பேரம்: ஜனாதிபதியிடம் சி.டி. ஆதாரம் வழங்குகிறது ஆம் ஆத்மி

முடக்கி வைக்கப்பட்டுள்ள டெல்லி சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என கடந்த வாரம் அம்மாநில ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தார். இதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாற்றியிருந்தது. டெல்லி மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஷேர் சிங் டாகர் தங்கள் கட்சி ஆட்சியைமக்க ஆதரவு கேட்டு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வான தினேஷ் மொஹனியாவிடம் 4 கோடி ரூபாய் வரை பேரம் பேசிய வீடியோ ஆதாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில் இந்த வீடியோ ஒளிபரப்பானது.
 
நேற்று அம்மாநில ஆளுநர் நஜிப் ஜங்கை சந்தித்து இந்த வீடியோவை வழங்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், குதிரை பேரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அழைக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
 
இந்நிலையில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடமும் இந்த வீடியோ ஆதாரத்தை வழங்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது என ஆளுநர் நஜிப் ஜங்குக்கு உள்துறை அமைச்சகம் மூலமாக உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கடிதம் வழங்கவும் ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.