ரூ.7.79 கோடி வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்: ஜூஸ் கடைக்காரருக்கு IT நோட்டீஸ்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜூஸ் கடை வைத்து தினமும் நூற்றுக்கணக்கில் மட்டுமே சம்பாதித்து வரும் ஒருவருக்கு, ரூ.7.79 கோடி வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தின் நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் முகமது ரஹீம். இவரது மொத்த வருமானம் தினசரி 500 முதல் 1000 ரூபாய் வரை தான் இருக்கும். அந்த வருமானத்திலேயே அவர் மிகவும் கஷ்டப்பட்டு தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சிறிய அளவில் ஜூஸ் கடை நடத்தி வரும் முகமது ரஹீமுக்கு, திடீரென வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், "உங்களுக்கு ரூ.7.79 வருமான வரி பாக்கி உள்ளது. அதை பத்து நாட்களில் செலுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அவர் அதிர்ச்சியடைந்து, "எனக்கு தினசரி வருமானம் 500 முதல் 1000 ரூபாய் மட்டுமே. எனக்கு எப்படி ரூ.7.79 கோடி வருமான வரி செலுத்தும் அளவுக்கு பணம் வந்தது என்று எனக்கே புரியவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த நோட்டீஸ் தனக்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் தீவிரமான மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், இதிலிருந்து விடுபடுவதற்கு தற்போது சட்ட ஆலோசகரை அணுகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வருமான வரித்துறை என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Siva