வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (13:37 IST)

ஜெயலலிதா வழக்கு மேல்முறையீடு பற்றி விவாதிக்கப்படவில்லை: சட்ட அமைச்சர் தகவல்!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
 

 
கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், 28 அம்சங்கள் குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இதில், 26வது அம்சமாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிப்பது பற்றிய பிரச்சனை இடம் பெற்று இருந்தது. ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்படவில்லை.
 
இது குறித்து அமைச்சரவை கூட்டம் முடிந்தபின் கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு குறித்து விவாதிக்கப்படவில்லை. அட்வகேட் ஜெனரல் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் வழங்கிய பரிந்துரை அறிக்கைகளில் சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி விளக்கம் பெற வேண்டி உள்ளது. அட்வகேட் ஜெனரல் தற்போது நகரில் இல்லாததால் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்படவில்லை" என்றார்.