வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 25 ஜூலை 2015 (19:29 IST)

ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் வழக்கில் கர்நாடக அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா ஆஜராகிறார்

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா ஆஜராகிறார்.
 

 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது கடந்த 1996ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவினால் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 18 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பரபரப்பு  தீர்ப்பளித்தார். அதில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்திருந்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது.
 
அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பவானி சிங் ஆஜரானது செல்லாது எனவும், அவர் அரசு வழக்கறிஞராக முன்வைத்த வாதங்களை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும்  உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, கடந்த மே 11ல் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அவர் வழங்கிய தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்து மதிப்பு தவறாகவும், குறைத்தும் மதிப்பிடப்பட்டிருப்பதாக சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்ச்சார்யா குற்றம் சாட்டினார்.
 
இதையடுத்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மனுவும், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தீர்ப்பில், ‘நீக்கப்பட்டுள்ள 6 நிறுவனங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்’ என்ற மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2 மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசின் மனுவுடன் சேர்த்து விசாரிப்பதாக அறிவித்தது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வில் வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா ஆஜராவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர். அப்போதைய வழக்கின் விசாரணையின் போது, அதிகமான அரசியல் அழுத்தத்திற்கு உள்ளானதாக அவர் பதவியை விட்டு சென்ற பின்பு, வெளியிட்ட புத்தகத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக இவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு இந்த வழக்கின் முழு விபரமும் தெரியும் என்ற காரணத்தால், மேல்முறையீட்டு வழக்கில், பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை, என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.