செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (08:14 IST)

காஷ்மீர் பாஜக பிரபலம் சுட்டுக்கொலை! – பயங்கரவாதிகள் சதியா?

காஷ்மீரில் பாஜக பிரபலம் மற்றும் அவரது குடும்பத்தினரை பயங்கரவாத கும்பல் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்ட முன்னாள் பாஜக தலைவராக பதவி வகித்தவர் வசீம் பாரி. இவர் முன்னாள் தலைவராக இருந்த போதே இவரது உயிருக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்ததால் 10 தனிப்படை காவலர்கள் இவரது பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இவரது சகோதரர் உமர் சுல்தான் மற்றும் தந்தை பஷீர் அகமது ஆகியோர் வசீம் பாரி வீட்டின் அருகிலேயே கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சகோதரரை பார்க்க வசீம் பாரி கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது தந்தையும் இருந்துள்ளார். அப்போது திடீரென கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் வசீம் பாரி மற்றும் குடும்பத்தினரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது போகும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தாக்குதல் நடந்தபோது வசீம் பாரியின் வீட்டில் இருந்துள்ளனர். பணியை ஒழுங்காக செய்யாத அவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னரே வசீம் பாரிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததால் இது பயங்கரவாதிகள் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தொலைபெசி வழியாக வசீம் பாரியின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.