1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (17:04 IST)

பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக ஜாகிர் உசேன் என்ற ஐஎஸ்ஐ உளவாளியை சென்னை திருவல்லிக்கேணியில் உளவு பிரிவு போலீஸார் கடந்த ஜூன் 19ஆம் தேதி கைது செய்தனர்.
 
இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், ஜாகிர் உசேன் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிப் பெற்றது தெரிய வந்தது. மேலும், அவர், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
 
மேலும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின் உத்தரவின்பேரில், இந்த இடங்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியதாகவும், அவை தெளிவாக இல்லாததால் மீண்டும் படம் பிடிக்க சென்னை வந்ததாகவும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை சென்னைக்கு அழைத்து வருவதற்காக வாடகைக்கு வீடு தேடி வந்ததாகவும் ஜாகிர் உசேன் கூறியிருந்தார்.
 
இதையடுத்து, ஜாகிர் உசேன் மீது ஐ.எஸ்.ஐ. உளவாளி, கள்ள நோட்டு கடத்தல் உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஜாகிர் உசேன், சிவபாலன், முகமது சலீம் ஆகியோர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், அத்துமீறி உளவு பார்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில், கடந்த மாதம் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 
இவ்வழக்கில் இன்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாகிர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.